பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில் மாவட்டத்தின் விவசாய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இரசாயனப் பசளை பயன்படுத்தப்படாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி தொடர்பாக சரியான தகவல் கொழும்பிற்கு அனுப்பப்படவில்லை என்ற கருத்து நிலவுகின்றது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளின் கவனயீனம் அல்லது மேலதிகாரிகளை திருப்திப்படுத்தும் நோக்கம் காரணமாக அனுப்பி வைக்கப்பட்ட குறித்த மதிப்பீட்டு அறிக்கை மக்களுக்கு ஏற்பட்ட சரியான பாதிப்புக்களை வெளிப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் அடுத்த காலபோகத்தினை மேற்கொள்வதற்கு தேவையான உர வகைகள் பற்றிய விபரத்தினை மதிப்பீடு செய்து வழங்குமாறும், அதுதொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்
Be First to Comment