Press "Enter" to skip to content

மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை

நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு, கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கி, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது மத்திய வங்கி ஆளுநர் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் எரிபொருளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால், அதனை செயற்படுத்த முடியாமல் போன நிலையில், இன்று அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் அதற்கான பயணத் திட்டம் தொடர்பில் முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா பரிந்துரைத்தார்.

அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரிய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் கொள்கைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலரை எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எங்கிருந்தேனும் டொலர்களைப் பெற்றுக் கொடுத்தாலும் மின்சாரசபை, கனியவளக் கூட்டுத்தாபனம், லிட்ரோ போன்ற நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள அதிக நட்டம் காரணமாக டொலர்களைக் கொள்வனவு செய்வதற்குப் போதிய ரூபா இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், முதல் சுற்றில் தொழில்நுட்பப் பிரிவின் பேச்சுவார்த்தைகளின் இறுதிநாள் இன்றாகும்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக்கூடிய 3 முதல் 4 மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும்.

இதனை எதிர்கொள்வதற்கு இயன்றளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலத்தில் பாதீட்டுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைமைக்கு அப்பால் நடைமுறை சாத்தியமற்ற வகையில் குறிப்பிடப்படுவதால், நாடாளுமன்றம் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு அமைச்சுக்கள் உள்ளிட்ட செலவீனங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுவதானது, இறுதியில் செலவீனத்தை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பாதீட்டுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை ஏற்படுவதற்கும், கடன் சுமைக்குள் சிக்குவதற்கும் காரணமாய் அமைகின்றது எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட தொகையைவிட மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபா வரை கடனைப் பெறுவது தொடர்பான தீர்மானத்தைப் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *