ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம்,
“ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் போடுவதாலோ அல்லது வெறுப்புத் தன்மையினை வெளிப்படுத்துவதின் ஊடாக இந்த கியூ வரிசை யுகமும் பொருளாதார நிலைமையும் அகன்றுவிட போவதில்லை. பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற மனோநிலமை ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமானால் இதுவும் கடந்து போகும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கேற்கின்ற போதிலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்ததில்லை.
நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில், தற்போது ஈ.பி.டி.பி. யை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்
Be First to Comment