இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும் தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கனவே செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் அமுலாகும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இயலுமானவரை செலவினத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த வருடத்திற்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment