டெங்கு காய்ச்சல் காரணமாக 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார்.
சிறுமிக்கு கடந்த 23ஆம் திகதி மாலை காய்ச்சல் இருந்துள்ளது. பனடோல் மாத்திரை வழங்கப்பட்டதனால் ஒரளவு சுகம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினல் கடுமையான காய்ச்சல் காரணமாக இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகள் வழங்கப்பட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அண்றைய தினம் இரவு சிறுமிக்கு காய்ச்சலும் வாந்தியும் அதிகரித்ததால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்திற்கோண்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமி சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுமி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது சிறுவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்கு காய்ச்சலினால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
காய்ச்சல் ஏற்பட்டால் நேடியாக அருகில் உள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment