Press "Enter" to skip to content

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறை தொடர்பான தகவலை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் வெளியிட்டிருக்கின்றார்.

இதன்படி, கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

விநியோகஸ்தர்களும் பெறப்படும் விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும். விநியோகஸ்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும். குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும்.

விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.

சிலிண்டரை பெறவருபவர் உரிய கிராம அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தே.அ.அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கும் முறைதமக்கு கிடைக்கப்பெறும் சிலிண்டர்களது எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.

கிடைக்கப்பெற்ற எரிவாயு சிலிண்டர்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய சிலிண்டர்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் SVM நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் SVM நிறுவனத்தினர் விநியோகஸ்தர்களுக்கான சிலிண்டர்களை விநியோகிப்பர். இதேவேளை, கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள்

மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் மற்றும் முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகஸ்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும் எனவும் அரச அதிபர் அறிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *