நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலில், கடற்றொழில் அமைச்சிற்குள் உள்ளடங்கியுள்ள திணைக்களங்களினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சில் இன்று(01.06.2022) நடைபெற்றது
இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நக்டா, நாரா, வடகடல், சீநோர் ஆகிய திணைக்களங்களின் நிறைவேற்று அதிகாரிகள், தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறை சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடினர்.
இலங்கை மீன்பிடித் துறைமுகத்தினால், மீன்பிடிக் கலன்களுக்கான எரிபொருட்கள் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், தேவையானளவு எரிபொருட்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கடலுணவுகளை பாதுகாத்து சந்தைக்கு அனுப்புவதில் காணப்படுகின்ற சவால்கள் தொடர்பாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தான அதிகாரிகளினால் எடுத்துக் கூறப்பட்ட நிலையில்,
நாட்டிற்கு குறிப்பிடத்தக்களவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற இறால் பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால்கள் உட்பட, பண்ணைகளில் வளர்க்கப்படுகின்ற கடலுணவுகளுக்கான உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடையாக டொலர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படடது.
அதேபோன்று, வடகடல் மற்றும் சீநோர் ஆகிய நிறுவனங்களின் உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடையூறுகள் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்ப்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“தற்போதைய சூழலில், எம்மிடம் இருக்கின்ற உற்பத்திசார் வேலைத் திட்டங்களை தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முன்கொண்டு சென்று வருமானத்தை உருவாக்குவதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய வேண்டும்.
எனினும், விரைவில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, எரிபொருள் போன்ற அடிப்படை தேவைகளை முடிந்தளவு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராய்ந்து சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் ” என்று தெரிவித்தார்.
மேலும், எவ்வாறான சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான கடலுணவு தாராளமாக – நியாயமான விலையில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், கடற்றொழில்சார் மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் வகையில் கடற்றொழில் அமைச்சு சார்ந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்
Be First to Comment