வவுனியா கணேசபுரத்தில் காணாமல் போன 16 வயது சிறுமி நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தாய், தந்தையற்ற நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற நிலையில் வழக்கமாக வீடு திரும்பும் நேரம் தாண்டியும் அவர் வரவில்லை.
இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர். விடயமறிந்து அயலவர்களும் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில் நெளுக்குளம் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் அன்றிரவு ஆட்கள் நடமாட்டமற்ற பகுதியில் கிணறு ஒன்றில் சிறுமியின் சடலம் காணப்பட்டது. கிணற்றிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மரத்தின் கீழ்பகுதியில் சிறுமியின் காலணி மற்றும் புத்தகங்கள் மீட்கபட்டன. மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிணறு அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை பொலிஸார் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்தனர்.
பாவனையற்ற நிலையில் காணப்பட்ட அந்த வர்த்தக நிலையத்தில் மதுபான போத்தல்கள் மற்றும் கயிறு என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
சிறுமியின் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்றாய்வு பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment