பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதி பிரதிநிதி மலின் ஹெர்விக் ஆகியோருக்கும் இடையில் இன்று உத்தியோகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய உணவு நிலைமை தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில், உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் விளக்கமளித்தார்.
அந்தவகையில், இந்த திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.
விவசாயத் துறை தற்போது எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடாகும்.
நன்கொடையாளர்கள் நாட்டிற்கு உதவ முன்வந்துள்ளனர்.
இந்நிலையில், நகர்ப்புற விவசாயத் திட்டம், மேலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அதிக நிதியுதவி வழங்கப்படும் என இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமுல்படுத்தப்படக்கூடிய உணவு நெருக்கடிக்கான பதில் திட்டத்தை தாங்கள் உருவாக்கி வருவதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, விவசாயிகள் எதிர்நோக்கும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், 5 தொடக்கம் 6 மாதங்களுக்குள் தற்போதைய விவசாயப் பற்றாக்குறையைப் போக்க முடியும் என்று பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார்
Be First to Comment