நகரசபை மாடிவீடு குடியிருப்புகளுக்கு சலுகை அடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் குடியிருப்புகள் பலவற்றில் வாடகைக்கு குடும்பங்கள் வாழ்கின்றன.
வீட்டு உரிமத்திற்கு நீண்ட கால வட்டி செலுத்துபவர்களும் உண்டு. இந்த அனைத்து வீடுகளின் உரிமத்தையும் குடியிருப்பாளர்களுக்கே சலுகை அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள இந்த தருணத்தில், மக்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுக்காமல் பொருளாதாரத்தையும் நாட்டையும் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம்.
ஒவ்வொரு அம்சத்தையும் விசாரித்து, ஒவ்வொரு அம்சத்தையும் பாதுகாத்து முன்னேற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.
நாம் படிப்படியாக முன்னேறினால் நாட்டை காப்பாற்ற முடியும். தனிப்பட்ட பிரச்சினை அல்லது கட்சிப் பிரச்சினை என்பதைத் தாண்டிய ஆபத்தான நிலை இங்கு உள்ளது.
இதன் ஆபத்தையும் தீவிரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், கடந்த காலத்தைத் தேடுவதில் அர்த்தமில்லை.
சிறிது காலத்திற்கு நாம் கடந்த காலத்தை மறந்து விடுகிறோம். நாட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில், எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.
ஒரு நாட்டை மீண்டும் உயர்த்த பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டும் போதாது. அதே நேரத்தில், சமூக -அரசியல் மற்றும் பொது சேவை சீர்திருத்தங்கள் தேவை.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்த சபையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் தோள்களில் உள்ளது. அந்தப் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும்.
அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும். தற்காலிக தீர்வுகளுக்கு பதிலாக, நீண்ட கால மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாட வேண்டும். எனவே, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டுக்காக புதிதாக சிந்திப்போம்.
தேவையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆரம்பிப்போம். நாம் அனைவரும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அமைப்பை அரசியலமைப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
அரச சேவையில் வரம்பற்ற வேலைவாய்ப்பை வழங்குவதன் காரணமாக செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. சில அரச ஊழியர்கள் பணிகளின்றி இருக்கின்றனர்.
எனவே, பொதுப்பணித்துறை முழுமையாக சீரமைக்கப்பட்டு சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். நாட்டின் பிரஜை வாழ்நாள் முழுவதும் உடனடி மற்றும் சிறந்த சேவைகளை இடையூறின்றி பெற உதவும் ஒரு பொது சேவையை உருவாக்க வேண்டும்.
இந்த மாற்றத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் மற்றும் மோசடி இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவதாகும்.
இதற்காக திருடர்களைத் தண்டிக்கக்கூடிய வலுவான விதிகளைக் கொண்ட ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Be First to Comment