Press "Enter" to skip to content

காதலால் பறிபோன இரண்டு உயிர்கள்!

இன்று (07) காலை வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறே இரட்டைக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அனுராதபுரம், எப்பாவல, எந்தகல சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து சுட்டுக்கொல்லப்பட்ட ஆண் ஒருவரின் சடலமும், கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எந்தகல – எப்பாவல பிரதான வீதியில் எப்பாவல – எந்தகல சந்திக்கு அருகில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் குறித்த இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எப்பாவல, எந்தகல பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளரான 31 வயதான காவிந்த பிரசாத் வீரகோன் மற்றும் அவரது நண்பரான ஆபிரகாம் மொஹமட் முபாரக் , நான்கு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டின் வரவேற்பறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் ஆபிரகாம் மொஹமட் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

சடலத்தின் அருகே துப்பாக்கியில் இருந்து வௌியான ஈயத் துண்டுகளை பொலிசார் கண்டுபிடித்தனர்.

வீட்டின் உரிமையாளர் காவிந்த பிரசாத், வரவேற்பறையை ஒட்டிய படுக்கைக்கு அடுத்த தரையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அவரது முகம் மற்றும் கைகளில் பலத்த வெட்டு காயம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் மனைவி பாத்திமா ஷானாஸ் கூறியதாவது:

“இவர்கள் இருவரும் எப்பாவளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் முச்சக்கரவண்டிக்கான எரிபொருளை பெற்றுக்கொண்டு முச்சக்கரவண்டியின் உரிமையாளரின் வீட்டிற்கு சென்று மீண்டும் கவிந்த பிரசாத்தை விடுவதற்காக அவரின் வீட்டுக்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ள நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.”

இன்று (07) காலை ஆகியும் தனது கணவர் வீடு திரும்பவில்லை எனவும் பின்னர் காவிந்த பிரசாத்தின் வீட்டிற்கு சென்றதாகவும் அங்கு அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாருக்கு அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டின் முன்புறம் உள்ள கார் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளரின் மகளுடன் காவிந்தவுக்கு காதல் இருந்ததாகவும் பாத்திமா ஷானாஸ் கூறியுள்ளார்.

இதனால் தகராறு காணப்பட்டதாகவும், இதற்கு முன்னர் காவிந்தவை காரில் மோதி விபத்துக்குள்ளாகியதாகவும், வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவரது கையை வெட்டியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாத்திமா ஷானாஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி எப்பாவல பொலிஸார் குறித்த வாகன திருத்தும் நிலையத்தையும் கொலை இடம்பெற்ற வீட்டிற்கு முன்பாக உள்ள அவரது வீட்டையும் சோதனையிட்டுள்ளனர்.

வாகன திருத்தும் நிலையம், வீட்டு வளாகம் மற்றும் கிணற்றுக்கு அருகாமையில் மூன்று இரத்தக் கறைகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபரின் பாதுகாப்பிற்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளரின் மகளுக்கும் மற்றும் காவிந்த பிரசாத்திற்கும் இடையிலான காதல் காரணமாக ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து இரண்டு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொலைகள் இடம்பெற்ற வீட்டில் பல இடங்களில் கைரேகைகளை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொலைகளுக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரத்தக் கறை படிந்த வெற்று மதுபான போத்தலை மோப்பமெடுத்த பொலிஸ் மோப்ப நாய் ´டைசர்´ கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிற்கு சென்று நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *