நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி சூழலுக்கு வியாபார சமூகமும் பொறுப்பு கூற வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷhன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரபல வியாபாரி ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கவுள்ளனர். நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் சூழலில் இவ்வாறான நியமனங்கள் குறித்து மனவருத்தத்தையே தெரிவிக்க வேண்டும்.
தற்போதைய அரசியல் நாடகத்துக்கு திரைக்கதை எழுதியவர்களும் நடிப்பதற்கு வருகின்றார்களா என்றே கேட்கத் தோன்றுகின்றது.
நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி சூழலுக்கு கொரோனா தொற்றுப் பரவலும் ஒரு காரணம் என்தை ஏற்றுக்கொள்கின்றோம். அது உண்மை.
ஆனால் வியாபார தரப்பினரும் தற்போதைய நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
எந்த நாடுகளை எடுத்துக்கொண்டாலும் பாரிய வியாபார துறைகளினூடாகவே நாடு முன்கொண்டு செல்லப்படுகின்றது. இதில் எமது நாடு என்ற வேறுபாடு இல்லை.
எனினும் எமது நாட்டில் காணப்படும் பாரிய மாற்றம் என்னவெனில், நாட்டின் பொருளாதாரமானது அடிமட்டத்துக்கு சென்ற போதிலும் வியாபாரத் துறைகள் அனைத்தும் பில்லியன் கணக்கிலான இலாபத்தையே காண்பிக்கின்றன. இது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகும்.
எமது நாட்டின் நிதி முறைமையில் பாரிய மாற்றம் காணப்படுகின்றது.
ஏனைய நாடுகளை எடுத்துக்கொண்டால் நாட்டின் பொருளாதாரத்துக்கு அமைய வியாபார துறைகளினது இலாபமானது ஒரளவு குறைந்து அல்லது கூடியே காணப்படும்.
ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது நிறுவனங்களின் இலாபமானது உயர்ந்த மட்டத்தில் உள்ளது.
அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை. கொள்ளையில் ஈடுபட்டால் மட்டுமே அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எமது நாட்டின் முறைமையானது தோல்வியடைந்த ஒரு முறைமையாகக் காணப்படுகின்றது.
இதனூடாக இந்த நாடானது தற்போது இருக்கும் நிலைமையைவிட மிகவும் ஒரு மோசமான நிலைமைக்கே செல்லும்.
Be First to Comment