முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யும் பணிகள், ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குருந்தூர் மலைப்பகுதியில், மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த தடையையும் மீறி அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலையினை நேற்று பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்காக பல்வேறு பாகங்களில் இருந்து பௌத்த தேரர்களும், அங்கு கூடியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த செயற்பாட்டிற்கு எதிராக அங்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோநோகராதலிங்கம், உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க குறித்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் கலந்துரையாடியிருந்தார்.
புத்தர்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அவர்கள் அங்கிருந்து சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Be First to Comment