இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, எம்.எம்.சீ. பெர்டினண்டோ, கோப் எனப்படும் பொதுமுயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடியால், ஜனாதிபதி ஊடாக இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது உண்மையில்லை என்று ஜனாதிபதியால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து தாம் மன உளைச்சல் காரணமாக அந்த கருத்தை வெளியிட்டதாகவும், அதில் உண்மையில்லை என்றும், அதற்கான மன்னிப்பு கோருவதாகவும் எம்.எம்.சீ. பெர்டினண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியிலேயே அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
Be First to Comment