Press "Enter" to skip to content

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் கைது

கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போது, ​இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கருதப்படும் 64 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவு அதிகாரிகள் இன்று (15) திருகோணமலை கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்துள்ளனர்.

அதன்போது, இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக பல நாள் மீன்பிடி படகில் பயணித்த, ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 பேர் உட்பட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 64 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான மற்றும் மிகவும் ஆபத்தான முறைகளில் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பொருத்தமற்ற மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாகவும், இந்த படகுகளில் பயணிக்க முயற்சிப்பது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *