இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
முன்பதாக யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான தான் சமர்ப்பித்திரந்த அமைச்சரவை பத்திரத்தினூடாக சாதகமான முடிவுகள் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டள்ளார்.
மேலும் எதிர்வரும் 6 மாதங்களில் ஆகக்கூடுதலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கான திட்டங்களை அமுல்படுத்துவது அவசியமாகும். இந்தக் காலப்பகுதியில் கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதன் மூலம் உயர்ந்த பயன்களை அடைந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி இராஜதந்திர அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் காலப்பகுதியில் 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதன் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுவதற்கான வாய்ப்புக் கிடைக்குமென்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment