6 சிக்ஸர்கள், 6 பௌண்ட்ரிகள் என மக்ஸவெல் காட்டிய அதிரடியால் 2 விக்கெட்களால் இலங்கை அணியை வெற்றி கொண்டது இலங்கை அணி.
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தசூன் சானக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இலங்கை அணிக்கு தொடக்கம் கொடுத்த தனுஷ்க குணதிலக, பதும் நிஸங்க ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை ஆடினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களை சேர்த்தனர். இருவரும் நிதானமாக – விரட்டக்கூடிய பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால், அணியின் ஓட்ட எண்ணிக்கை சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது.
19ஆவது ஓவரில் இருவரும் அரைச்சதங்களை எட்டினர். நிஸங்க 61 பந்துகளிலும், குணதிலக 50 பந்துகளிலும் தமது அரைச்சதங்களை எட்டினர். தொடர்ந்த ஆட்டத்தில், ஓட்டம் ஒன்றை பெற முனைந்து குணதிலக ரன் அவுட் ஆனார். அவர் 7 பௌண்ட்ரிகளுடன் 55 ஓட்டங்களை குவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பதும் நிஸங்க அகரின் பந்தில் பின்ஞ்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவர், 6 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 56 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதன் பின்னர் வந்த குசல் மெண்டிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தனஞ்சய டி சில்வா 7, சரித் அசலங்க 37, தசூன் சானக 6, சாமிக கருணாரத்ன 7 ஓட்டங்கள் என ஆட்டமிழந்தனர். எனினும், 8ஆவது விக்கெட்டுக்காக இணைந்த வனிந்து ஹசரங்க மெண்டிஸூக்கு ஈடுகொடுத்து ஆடினார்.
49ஆவது ஓவரில் றிச்சர்ட்சன் வீசிய ஓவரில் 58 பௌண்ட்ரிகளை விளாசினார் ஹரசங்க. அவர், 19 பந்துகளில் 37 ஓட்டங்களைக் குவித்து இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை மட்டும் இழந்து இலங்கை அணி 300 ஓட்டங்களை எடுத்தது.
குசல் மெண்டிஸ் 8 பௌண்ட்ரிகள் ஒரு சிக்ஸருடன் 86 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸியின் பந்துவீச்சில் லபுசாக்னே, அகர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு ஆட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு வோர்ணர் ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த பின்ஞ், ஸ்மித் அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
இதனிடையே போட்டி மழையால் தடைப்பட்டது. சிறிது நேரத்தின் பின்னர் போட்டி ஆரம்பமாகியபோது டக்வேர்த் – லூயிஸ் முறைப்படி 44 ஓவர்களில் 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ஆஸி. அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய பின்ஞ் – ஸ்மித் இணை ஓட்டங்களை சேர்த்தனர். 44 ஓட்டங்களுடன் பின்ஞ் ஆட்டமிழந்தததை தொடர்ந்து களம் புகுந்தார் லபுசாக்னே. அரைச்சதம் கடந்த ஸ்மித் 53 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து, லபுசாக்னே – ஸ்ரொய்னிஸ் இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர். எனினும் அவர்களாலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. லபுசாக்னே 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஸ்ரொய்னிஸ் 44 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து அலெக்ஸ் காரி 21 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இந்நிலையில், அடுத்து வந்த மக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். அவரின் அபார ஆட்டத்தால் ஆஸி. அணி இலகுவெற்றி பெற்றது. 42.3 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்களை மட்டும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.
மக்ஸ்வெல் 6 சிக்ஸர்கள், 6 பௌண்ட்ரிகளை விளாசி 80 ஓட்டங்களை 51 பந்துகளில் குவித்தார்.
இலங்கையின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக மக்ஸ்வெல் தெரிவானார்.
Be First to Comment