மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பான அறிக்கை மன்னார் நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
மன்னார் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அகழ்வுப் பணியை மேற்கொள்ளும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ஷவும் இன்றையதினம் மன்றில் முன்னிலையாகவில்லை. எனினும், அவர்களுடைய அறிக்கை, பதிவுத் தபால் மூலம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு குறித்த அறிக்கையின் பிரதிகள் இன்றைய தினம் வழங்கப்படவில்லை எனவும் பிறிதொரு தினத்தில் அதனை பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டார்.
மனிதப் புதைகுழியிலிருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட எச்சங்கள், தடயப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கு உசிதமான திகதியை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என மன்னார் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment