வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் அருகில் இன்று காலை 10.30 அளவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக யாழ்ப்பாணத்திலுள்ள ஏதிலிகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகரின் கள அலுவலகத்தை சென்றடைந்தனர்.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அமைச்சரின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
போராட்டத்தின் நிறைவில், போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Be First to Comment