Press "Enter" to skip to content

புலிகளால் புதைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய்..!

புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 715 லீற்றர் மண்ணெண்ணெய் நேற்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளரான கந்தசாமி என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது காணியினை துப்பரவு செய்தபோது , காணிக்குள் புதைக்கப்பட்டு இருந்த சில பரல்களை அடையாளம் கண்டுள்ளார்.

பின்னர் அது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொலிஸார் காணியில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியினை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் பிரகாரம் நேற்றைய தினம் திங்கட்கிழமை  முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், பொலிஸ் அதிகாரிகள், படை அதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது நிலத்தில புதைக்கப்பட்ட 7 பெரல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த 7 பெரல்களில் இருந்தும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் காணப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்த   நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அது தொடர்பில் காணி உரிமையாளர் தெரிவிக்கையில், “தோட்டம் செய்வதற்காக வீட்டு காணியின் பின்பக்கத்தில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு செய்து, பனை மரத்தினை அகற்றும் போது நிலத்தில் பெரல் புதைக்கப்பட்டு இருந்தன.

இவற்றை யார் வைத்தார்கள் என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2009 ஆம் ஆண்டு நாங்கள் இடம்பெயர்ந்து போய்விட்டோம்.

அதன் பின்னர்  என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. 2011 ஆம் ஆண்டு மீள்குடியேறினோம். எங்கள் காணியில் எதுவித பொருட்களும் இனம்காணப்படவில்லை. விவசாய நடவடிக்கைக்கு நிலத்தினை பண்படுத்தும் போதே இவை தென்பட்டுள்ளன” என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *