டொலரை ஈட்டுவது தொடர்பிலான திட்டத்தை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா இன்று சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர், அவர் தமது சொத்து விபரங்கள் தொடர்பான தகவல்களை சபாநாயகரிடம் கையளித்தார்.
யுத்த காலத்தின் போது, தாம் முதலீட்டு சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமையினால், தற்போது வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தமக்கு இந்த உறுப்புரிமை கிடைத்தமைக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூழ்கும் கப்பலில் தாம் ஏறி பயணிப்பதாக ஏனையோர் கூறினால், எனது பார்வையில் அவ்வாறு கப்பல் மூழ்கவில்லை. வேகமாக பயணிக்க கூடிய கப்பல் என்ற காரணத்தினாலேயே இந்த கப்பலில் ஏறியுள்ளேன்.
இதன்மூலம் தற்போதைய பிரச்சினைக்கு தம்மால் உரிய தீர்வொன்றை முன்வைக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்
Be First to Comment