தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, கைதுசெய்ய்பபட்ட இரண்டு இலங்கையர்களின் தண்டனைக் காலத்தைக் குறைத்து மேல்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் சிறையிலிருந்து விடுதலையானதும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த இருவர், கடந்த 2015ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே தமிழக கியூ பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து சைனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசிகள், சிம் அட்டைகள் என்பனவற்றுடன் இந்திய மற்றும் இலங்கை நாணயங்கள் உட்பட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயன்றதாக அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், இருவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை இரத்து செய்யக்கோரி, குறித்த இருவர் சார்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிபதி கே. முரளி சங்கர் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, மனுதாரர்கள் இந்தியாவில் இனிமேல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் இந்தியாவிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்று தெரிவித்ததுடன், அது தொடர்பாக பிரமாண பத்திரத்தை சட்டத்தரணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, உத்தரவை அறிவித்த நீதிபதி, மனுதாரர்கள் 6 ஆண்டுகள் 10 மாதம் சிறையில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவருக்கும் இராமநாதபுரம் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகால சிறைத் தண்டனை, 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது.
மனுதாரர்கள் சிறையிலிருந்து விடுதலையானதும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
இந்தியாவை விட்டு வெளியேறும் வரை அவர்கள் ஏதிலிகள் முகாமில் தங்கியிருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
Be First to Comment