Press "Enter" to skip to content

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தமக்கு முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம்.

அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்து விட்டன.

இந்த நிலையில் எமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய போது வடமாகாணத்தில் விசேடமாக தூர இடங்களுக்கு பணிக்குச் செல்லும் ஆசிரியர்களின் நிலை குறித்து பேசிய போது, அவர்கள் பாடசாலை அதிபருக்கு முறைப்படி அறிவிக்குமாறும் அதனை ஏற்றுக்கொள்ளாத அதிபர்கள் தொடர்பாக தமக்கு தகவல் தருமாறு கூறியுள்ளார்.

ஆகையால் தூர இடங்களுக்குப் பணிக்குச் செல்வோர் போக்குவரத்து இடர்ப்பாடு தொடர்பாக அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஆசிரியர்களுக்கான போக்குவரத்துகள் சீராகாவிட்டால் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாத சூழ்நிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாது வீண் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் பெற்றோராகிய நீங்களாவது ஒன்று சேர்ந்து ஒரு மார்க்கத்தை உருவாக்குங்கள்.

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து பொறிமுறை சீராகவில்லையென்றால் திங்கள் முதல் பாசாலைக்குச் செல்லவேண்டாம் என நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *