முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாணவர்களுக்கு நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் பலரை தேடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து பல பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு பாலியல் சேட்டை புரிந்து பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் மாணவர்கள் சிலருடன் இணைந்து மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த சேட்டையை முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்டபோது பல மாணவிகளின் நிர்வாணமாக எடுத்துக்கொண்ட வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும மாணவிகளுடன் உடலுறவு கொண்ட வீடியோக்கள் குறித்த தொலைபேசியில் இருப்பதை அவதானித்து மேற்கொண்ட விசாரணைக்கு அமைய ஆசிரியரும் மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஆசிரியர், மாணவர்களை பயன்படுத்தி மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழுத்தி அவர்கள் ஊடாக அந்த மாணவிகளுடைய நிர்வாண புகைப்படங்களை பெற்று ஆசிரியரும் அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து பொலிசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது ஒரு மாணவியை ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் குறித்து ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில் ஆசிரியரோடு சேர்ந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொலிசார் கைது செய்திருந்தனர்.
சுமார் பதினேழு, பதினெட்டு வயதுடைய இந்த ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது மாணவர் ஒருவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் இன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக மன்றிலே ஆஜரான சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், இந்த செயல்பாடு தொடர்பில் நீதிமன்றத்தை தெளிவுபடுத்தியிருந்தார். இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து, பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தி உள்ளதையும் எடுத்துக் கூறி, இது பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது எனவும் இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஜனன், குறித்த விசாரணை தொடர்பில் சந்தேகநபரான ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபருக்கு பிணை வழங்குகின்ற போது இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும் சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து அவரின் பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு தெரிவித்தார்.
இந்த சம்பவங்களையும் இந்த சம்பவத்தின் பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்றத்தின் நீதவான் ரி.சரவணராஜா குறித்த நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
Be First to Comment