திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் கூறியிருப்பதாவது:
அடுத்த எரிபொருள் தொகை நாட்டிற்கு வரும் வரை பொது போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வாரமும் அடுத்த வாரமும் இலங்கைக்கு வரவிருந்த பெற்றோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் தாங்கிகளை வங்கி மற்றும் விநியோக பிரச்சனைகள் காரணமாக உரிய நேரத்தில் விநியோகிக்க முடியவில்லை என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாகவும் இந்த நிலைமையின் கீழ் எரிபொருள் கப்பல் வருகைக்கான திகதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த கச்சா எண்ணெய் கப்பல் வரும் வரை சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என்றும், தாமதம் மற்றும் அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல முனையங்களில் இருந்து எரிபொருள் விநியோகம் இன்று நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
Be First to Comment