நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக துண்டுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் முதல் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு துண்டுச்சீட்டை விநியோகிக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் இதுவரை துண்டுச்சீட்டு விநியோகம் இடம்பெறவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்திருக்கின்றமையால் தாங்களும் பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசை காரணமாக நுகர்வோர் தமது வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்த்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஹப்புத்தளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எமதுசெய்திச் சேவைக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
இதேவேளை, வடபிராந்தியத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் 7 பேருந்து சாலைகளின் பணியாளர்கள் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை ஊழியர் அருளம்பலம் அருளேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – அச்சுவெலி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கான துண்டிச்சீட்டு பதிவினை இராணுவத்தினர் மேற்கொண்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கான பதிவுகளை முன்னெடுத்து வருகின்றனர்
Be First to Comment