இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடேரி (Yury Materiy) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 65 ஆவது ஆண்டு நிறைவு இவ்வருடம் கொண்டாடப்படுகிறது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சமூக உறவுகளையும் நட்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கையில் ரஷ்யாவின் ஆதரவிற்காகவும், தேவையான சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் ரஷ்யாவின் உதவிக்காகவும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
சுற்றுலா, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமான போக்குவரத்து, கல்வி, வர்த்தகம் மற்றும் உரம் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியின் பல முக்கிய பகுதிகள் குறித்து ஜனாதிபதியும் ரஷ்ய தூதுவரும் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment