இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொருடகளை ஏற்றி வருவதற்கான படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(28.06.2022) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய ஙேவைகளை மாத்திரம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அதன்பின்னர் நாடு வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையல்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆதரவு கிடைத்துள்ளதா என ஊடகவியலாளர் வினவினார். பதிலளித்த அமைச்சர் கூறுகையில்
அதில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. அதுவும் பெறப்பட்டுள்ளது.
ஆனால், நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவை நிறைவடைந்ததும் எமது மக்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிய படகு இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்படும்” என்று தெரிவித்தார்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் அனைத்தும் எமது மக்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும், எமது பிரதேசங்களின் தன்மைகளுக்கு ஏற்றபவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனவும் அதாகாரிகளைக் கேட்டுக் கொண்டார்
Be First to Comment