மசகு எண்ணெய் ஏன் இறக்குமதி செய்யப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும்,மசகு எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிக்கப்பட்டால் நாட்டின் எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை ஈடுசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 5,200 மெட்ரிக் தொன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் 15 நாட்களுக்கு இயக்கப்பட்டால், மாதந்தோறும் ஒரு எரிபொருள் ஏற்றுமதி போதுமானதாக இருக்கும்.

சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 714,000 லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல், 1,860,000 லீற்றர் டீசல், 1,300,000 லீற்றர் மண்ணெண்ணெய் மற்றும் 1,400,000 லீற்றர் ஜெட் A1 எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
விமான எரிபொருளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்தால், அரசாங்கத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
உள்ளூர் சுத்திகரிப்பு செயல்முறையின் மூலம் டொலர் தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது கடினமான செயலாகும், அடுத்த வாரத்தில் கொள்முதல் செய்வதற்கான முன்பதிவுகளை வழங்க முடியாது என்றார்.
மசகு எண்ணெய்க்கான முன்பதிவு ஜூலை 15ஆம் திகதியும், மற்றுமொரு ஏற்றுமதி ஆகஸ்ட் 12ஆம் திகதியும் வரும் என்றும் அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களை அழைப்பதற்கும் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனியார் மயமாக்கப்படாது என அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், அத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.





Be First to Comment