பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், இடைக்கால பிரதமர் ஒருவர் பதவியேற்கும் வரை தாம் பிரதமராக செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட உரையின் போது தனது ஆட்சிக்கு உதவிய பிரித்தானிய மக்களுக்கு நன்றி தெரிவித்த பொரிஸ் ஜோன்ஸன், அரசியலில் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் என குறிப்பிட்டார்.
இங்கிலாந்தின் பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கான பதிய தலைவரை நியமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் தற்போதைய நிலை இருண்டதாக காணப்படுகின்ற போதிலும், எதிர்காலம் பொன்னானதாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தன்னுடைய யோசனை திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படாமை தமக்கு வருத்தமளிப்பதாகவும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டார்.
உலகத்திற்காக தான் பல சிறந்த திட்டங்களை முன்னெடுத்த நிலையில், தாம் பதவி விலகுவது கவலையளிப்பதாக தெரிவித்த அவர் இது ஒரு சிறிய இடைவெளி மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்தின் பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கிறிஸ், கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.
எனினும் கிறிஸ் மீது பிரதமர் பொரிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் பதவி விலகினர்.
இதனையடுத்து சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட், குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோரும் தங்களது பதவியை விட்டு விலகினர்.
இந்தநிலையிலேயே பொரிஸ் ஜோன்சனும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதுடன், பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்
Be First to Comment