உக்ரேனிய தானிய ஏற்றுமதி மீதான ரஷ்யாவின் கட்டுப்பாடு இலங்கையின் கொந்தளிப்புக்கு பங்களித்திருக்கலாம் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலைமைய ஏனைய நெருக்கடிகளையும் தூண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் தாக்கம் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பதை காணமுடிகிறது.
இலங்கையின் நிலைமைக்கும், அது பங்களித்திருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது, இது உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பால் கணிசமாக அதிகரித்துள்ளது என்று பிளிங்கன் கூறியுள்ளார்.
ரஷ்ய முற்றுகையின் காரணமாக தாய்லாந்திலும் உரங்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
உணவு மற்றும் எரிபொருளின் கடுமையான பற்றாக்குறை காரணமாக பல வாரங்களாக இலங்கை சிதைந்து போயுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை பிரவேசித்ததை அடுத்து, அவர் பதவி விலகுவதற்கு இணங்கினார்.
இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை விரைவாகக் காணுமாறு இலங்கையின் தலைவர்களை பிளின்கன் வலியுறுத்தியுள்ளார்.
எந்த ஒரு அரசியல் கட்சியையும் அல்லாது, நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இதை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்தை தாம் கோருவதாக பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே இருக்கும் அரசாங்கமாக இருந்தாலும் சரி – நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை மீண்டும் கொண்டு வரும் தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு விரைவாக செயல்படுவது கடமையாகும் என்றும் பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இத்தகைய தீர்வுகள் பொதுமக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment