இன்று எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையை நாடு அடைந்துள்ளது. இது மிக ஆபத்தான நிலையாகும். இன்று பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. நாட்டில் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்து வருகின்றது. விலை அதிகரிப்பால் மக்கள் கடும் நெருக்கடிக்குள் வாழுகின்றனர். இந்த நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி, ஒரு கட்சியாக பொறுப்புடன் செயல்படும் என்பதை முழு நாட்டிற்கும் கூற விரும்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானித்தப்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்.
பாராளுமன்றம் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்தது. நாடு தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். வீழ்ந்த நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை எம்மால் முன்வைக்க முடிந்தது. இது ஒரு கூட்டு முயற்சியான வேலைத்திட்டம், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இது கடினமான பணியாகும். அதனை எதிர்கொள்ள சஜித் பிரேமதாச தயாராக இருக்கிறார் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment