புதிய ஜனாதிபதி தனது முதலாவது கடமையாக ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பார்வையிடச்சென்றனர். அதன்போது ஊடகங்களுககு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் அடைத்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. உண்மையை தெரிவித்தே சிறைக்கு சென்றார். அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் பல தடவைகள் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். என்றாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொலைகாரர்களும் போதைப்பொருள் கடத்தல்கார்களும் பொது மன்னிப்பில் விடுதலை பெற்றுச்சென்றுள்ளர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கொலை செய்த குற்றத்துக்கோ அல்லது போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாலோ சிறைப்படுத்தவில்லை. அவர் எப்போதும் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து வருபவர். அதனால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகிய பின்னர் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் புதிய ஜனாதிபதிக்கு முதலாவது கடமையாக ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி விடுக்க இருக்கின்றது என்றார்.
Be First to Comment