Press "Enter" to skip to content

இன்று நாடாளுமன்றம் கூடுகிறது – இரு பிரவேச வீதிகள் மூடப்பட்டுள்ளன

நாடாளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க உள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் பிரகாரம் சபாநாயகர் சகல உறுப்பினர்களையும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் 20ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இந்த நாட்டின் வரலாற்றில் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அரசியலமைப்பு ரீதியாக  புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை, பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் புதிய ஜனாதிபதியாக போட்டியிட முன்வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அவர்கள் வருகைதர சந்தர்ப்பம் அளிக்குமாறு, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்றைய தினம் இலங்கையர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இன்று நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகள் காவல்துறையினரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதன்படி, போக்குவரத்துக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *