எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்றைய தினத்திற்குள் அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டலஸ் உள்ளிட்டோர் அவரது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் ஆராய்ந்ததன் பின்னர் இன்றைய தினம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேநேரம், இன்று மாலை இடம்பெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு கூட்டத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவும் இன்று மாலை தமது தீர்மானங்களை அறிவிக்கவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கட்டாயம் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளும் என அதன் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது, வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளும் தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, எந்த வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானித்து இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Be First to Comment