காலி முகத்திடலில் முப்படை மற்றும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும், நுழைவாயிலை அடைத்தும் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் கூடாரங்களை அகற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த கூட்டு நடவடிக்கையின் பின்னர், போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்களை முப்படையினரும் காவல்துறையினரும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
காலி முகத்திடல் ஜனாதிபதி செயலக நுழைவாயிலை முற்றுகையிட்ட, போராட்டக்காரர்கள் அகற்றும் நடவடிக்கையை முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஆரம்பித்தனர்.
அங்கு போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சென்ற போது இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், காலி முகத்திடலுக்கான அனைத்து வீதிகளையும் மறித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
அங்கு ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா அல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
Be First to Comment