Press "Enter" to skip to content

பாடசாலைகள் இன்றுடன் மீண்டும் ஆரம்பம்

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இன்று மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் காலப்பகுதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் மகிழுந்துகளுக்கு, நாடுமுழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து பேருந்துசாலை நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாரத்தில் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து வசதியினை கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய பாடசாலைகள் மூன்று நாட்கள் மாத்திரம் நடத்தப்படுவதுடன் இரண்டு நாட்கள் இணையவழியில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தென் மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான ஐந்து நாட்களும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு செல்லும் பணிக்குழாமினர் மீண்டும் வீடு திரும்புவதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் குறிப்பிட்டார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *