பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போக்குவரத்துச் செலவை இனி பெற்றோர்களால் தாங்க முடியாது, எனவே மாணவர்களின் கல்விக்கு நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல முடிவு. அரசாங்கம் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது என்பதற்காக மாணவர்களின் கல்வியை அழித்துவிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.
“இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், சில பாடசாலைகளில் 50% மாணவர்களும், சில பாடசாலைகளில் 35% மாணவர்களும் மட்டுமே வருகை தந்துள்ளனர். பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு, போதுமான எரிபொருள் வழங்க வேண்டும்.
எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போக்களிலிருந்து பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது . ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். மேலும், ஆசிரியர்கள் எவ்வாறு பாடசாலைகளுக்கு செல்கிறார்கள் என்பது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எரிபொருளை வழங்குமாறு நாங்கள் கோரிய போதிலும் எந்தவொரு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment