நாடாளுமன்றில் நாளை அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் செயற்குழு, தீர்மானம் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அறிவித்துள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல், அதற்கு ஆதரவளிக்க கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பொது நிதிக்குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய குழுக்களிலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் அங்கம் வகிப்பார்கள்.
இதேவேளை ஆளும் கட்சி எதிர்பார்க்கும் சர்வகட்சி அரசாங்கத்தில், ஐக்கிய மக்கள் சக்தி அங்கம் வகிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சுக்களையும் பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் முகாமுக்கு இழுக்க வேண்டும் என கருதுகின்றனர்.
எனவே அவ்வாறானதொரு அரசாங்கத்தின் பங்காக இருக்க தாம் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இன்று அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக தாம் வாக்களிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான துஸார இந்துனில் அமரசேன, முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருண மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Be First to Comment