இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி (short term visit pass) 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பாரிய எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த 13 ஆம் திகதி இலங்கையை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறி, கடந்த 14 ஆம் திகதி மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அவர் சிங்கப்பூர் சென்றபோதும், இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். அதன்பின்னரே மின்னஞ்சல் மூலம் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
அதன்பின்னர், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை அல்லது வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் முந்தைய அறிக்கையில், சிங்கப்பூரின் குடிவரவு திணைக்களம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
மேலும் இலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு பொதுவாக சிங்கப்பூரில் 30 நாள் குறுகிய கால பயண அனுமதி வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குறுகிய கால பயண அனுமதி காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்துள்ளார் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
Be First to Comment