மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் விவாகரத்துகோரிய மனைவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கணவர், பெற்றோர் உட்பட கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் வசித்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்துவருகின்ற நிலையில் கணவனிடம் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்குதாக்குதல் செய்துள்ளார்.
சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (29) காலையில் மனைவி வீட்டை கணவர், அவரது பெற்றோர் உட்பட 3 பேர் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில், கணவன் அங்கிருந்த மனைவியின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று தனது வீட்டின் அறையில் பூட்டிவைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மனைவியின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, 119 பொலிஸ் அவசரசேவைக்கு தனது சகோதரியை கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக பொலிஸார் கடத்திகொண்டு அறையில் பூட்டிவைத்த பெண்ணை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரைவிளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Be First to Comment