Press "Enter" to skip to content

சர்வகட்சி அரசாங்கம் பற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஊடக அறிக்கை

சர்வ கட்சி அரசில்
தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும்
அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதற்கான அழைப்பையும் சர்வ கட்சிகளுக்கும் எழுத்து மூலம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் அந்த அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்பது மாத்திரமல்லாது அந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான பங்களிப்பையும் செய்துவருகின்றது.
இந்த நிலையில் சர்வ கட்சியில் பங்கெடுப்பதும், சர்வ கட்சி அரசொன்றின் எதிர்கால வேலைத்திட்டத்தில், மூன்று தசாப்பத்திற்கும் மேலாக கொடிய யுத்த வன்முறைக்கு முகம் கொடுத்து பல வழிகளிலும் இழப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களையும் வகுத்துக்கொண்டு ஒரு தேசிய இனமாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

எனவே தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையின் தற்போதைய அரசியல் செல் நெறியை சரியாக கணித்து நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
சர்வ கட்சி அரசை வரவேற்கும் அதேவேளை அதற்கு முரண்பாடான நிபந்தனைகளை விடுப்பதும், குழப்பத்தில் அரசியல் லாபம் தேடும் உள்நோக்கத்தோடும் தீர்மானங்களை எடுப்பார்களேயானால் அது மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்கச் செய்ததாகவே அமையும்.

எனவே ஏனைய தமிழ்க்கட்சிகள் தமது வழமையான எதிர்ப்பு அரசியல் எனும் சமகாலத்திற்கு பொறுத்தமற்ற அரசியல் போக்கை கைவிட்டு, ஈ.பி.டி.பியாகிய நாம் தொடர்ந்தும் கூறிவரும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறைக்கு வருவது காலத்தின் அவசியமாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *