தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா(22). இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த மகேந்திரன் என்ற இளைஞர் சந்தோஷ் பிரியா குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளார்.
இதனை அறிந்த அருகிலிருந்த மக்கள் மகேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி ஊரை விட்டே விரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் விவசாய கிணறு ஒன்றில் கிடப்பதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து அந்த சடலம் மீட்கப்பட்டபோது அது சந்தோஷ் பிரியா என்று தெரிய வந்தது. அதன் பின்னர் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகர உண்மை தெரிய வந்தது.
கடந்த சூன் 22ஆம் திகதி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக பயிற்சி மையத்திற்கு சென்ற சந்தோஷ் பிரியா காணாமல் போயிருக்கிறார். அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த விடயம் ஏற்கனவே பெற்றோருக்கு தெரிந்திருந்ததால், குறித்த இளைஞருடன் அவர் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதன் காரணமாக சந்தோஷ் பிரியாவின் பெற்றோர் தங்கள் மகளை தேடாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சந்தோஷ் பிரியாவின் உடல் மீட்கப்பட்டது. அவரது செல்போனை வேறொருவர் பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்த பொலிசார், அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அது ஊரை விட்டு அடித்து விரட்டப்பட்ட மகேந்திரன் என்பது தெரிய வந்தது.
வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த மகேந்திரன், உயிரிழந்த சந்தோஷ் பிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் வேறொரு இளைஞரை அவர் காதலிப்பதை அறிந்த மகேந்திரன், பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பிய சந்தோஷ் பிரியாவை இடைமறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பிரியா அவனை ஓங்கி அறைந்துள்ளார்.
அதன் பின்னர் கோபத்தின் உச்சிக்கு சென்ற மகேந்திரன், பிரியாவை கொடூரமாக தாக்கி வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த பிரியாவின் கை, கால்களை துப்பட்டாவால் கட்டி அருகில் இருந்த கிணற்றில் வீசி சென்றுள்ளார்.
இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பொலிசார், அவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be First to Comment