சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கையை போன்று பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டாம் என்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சீனாவின் பட்டுப்பாதை திட்ட முன்முயற்சியின் மூலம் அதிகக் கடன்களைப் பெறுவது பற்றி வளரும் நாடுகள் இருமுறை யோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பணவீக்க அதிகரிப்பு மற்றும் அபிவிருத்தி குறைந்து வருவதால், சந்தைகளில் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மோசமான கடன் முடிவுகள் நாடுகளை கடன் நெருக்கடியில் தள்ளும் அபாயம் உள்ளது என்ற அடிப்படையில், சீனா, நாடுகளுக்கான கடன்களை மதிப்பிடுவதில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சீன ஆதரவு உள்கட்டமைப்புத் திட்டங்கள் வருமானத்தை ஈட்டத் தவறியதாக பங்களாதேஸின் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் சீனாவின் மீது அனைவரும் குற்றம் சுமத்துவதை,சீனா நிராகரிக்கின்றபோதும், சீனாவே இந்த நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டும் என்று பங்களாதேஸின் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் எந்தெந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சீனா போதுமான அளவு கடுமையாக இருக்கவில்லை என்பதை அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது.
எனவே ஒரு திட்டத்திற்கு கடன் கொடுப்பதற்கு முன் முழுமையான ஆய்வை, சீனா மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் தெரிவித்தார்.
Be First to Comment