தாய்வானை அதன் தாய்நாட்டுடன் – சீனாவுடன் இணைப்பதற்காக அனைத்து வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு சீனா தயாராகவுள்ளது என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தேசிய ஊடக அமையத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றநிலை அதிகரிப்பதற்கு அமெரிக்காவே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
தாய்வான் நீரிணையில் பதற்றம் அதிகரிப்பதற்கான முழு பொறுப்பையும் அமெரிக்கா ஏற்கவேண்டும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் நான்சி பெலோசியின் சமீபத்தைய தாய்வான் விஜயத்தை ஒரு சீன கொள்கையை மீறும் பாரதூரமான நடவடிக்கை என வர்ணித்துள்ளார்.
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சபாநாயகர் பெலோசி தான் தாய்வானிற்கு செல்வேன் என்பதில் விடாப்பிடியாக காணப்பட்டார் இதன் மூலம் தற்போது காணப்படும் நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கையை அமெரிக்காவே முதலில் எடுத்தது என்பதை பெலோசி வெளிப்படையாக உலகிற்கு காண்பித்தார் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனா தனது இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது இது நியாயபூர்வமானது நியாயப்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்வானை அமைதியான முறையில் தன்னுடன் ஒன்றிணைப்பதற்காக சீன மிகவும் பொறுமையாக காத்திருக்கின்றது ஆனால் ஏனைய வழிமுறைகளை பயன்படுத்த மாட்டோம் என்பதை எங்களால் நிராகரிக்க முடியாது என அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
தேவையான சந்தர்ப்பத்தில் நிர்ப்பந்திக்கப்படும்போது நாங்கள் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வழிமுறைகளும் என்பதற்கான அர்த்தம் என்னவென செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை நீங்கள் உங்கள் கற்பனைகளை பயன்படுத்துங்கள் என சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது தாய்வான் பிரிந்து போவதற்கு அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment