சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து கனிந்துள்ள சூழலை சரிவரப் பயன்படுத்துமாறு தமிழ் அரசியல் தரப்பினருக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்வேறு முரற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், இன்னும் சில தினங்களில் குறித்த விவகாரத்திற்கு தீர்வினை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று(12.08.2022) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –
“இருண்டிருந்த ஒரு யுகத்தில், அதை சபித்துக் கொண்டிராமல், ஒரேயோரு விளக்காக இருந்து, இந்த நாட்டுக்கே ஒளி தருவதற்கு முன்வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என்பதை யாவரும் அறிவோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள், இந்த நாடு முகங்கொடுத்திருந்த நெருக்கடி நிலைமையில், இந்த அரசுக்கெதிராக எழுந்திருந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்வருமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும். கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆசையிருந்தும், அச்சம் காரணமாக பலரும் பின்;வாங்கியும், நிபந்தனைகளை விடுத்தும், தப்பித்தும் கொண்டும் இருந்த நிலையில், இந்த சவாலை தைரியமாக ஏற்று முன்வந்தவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
எந்தவொரு விடயம் குறித்தும் நடைமுறைச் சாத்தியமாக சிந்தித்து, முடிவெடுக்கும் நாம், இந்த நாட்டின் சவால்கள் மிகுந்த இக்காலகட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் ஆற்றல் குறித்து திடமான நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் அரசியல் சதி காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்யவிருந்த நிலையில், பதில் ஜனாதிபதியாகவும் இடைக்கால ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்று எமது நாடு முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினைத் தேடித் தரக் கூடியவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே என்ற உறுதியான நம்பிக்கை எம்மிடம் இருந்ததால், எமது ஆதரவினை பகிரங்கமாகவே அவருக்கு வழங்க முன்வந்திருந்தோம்.
நாம் சுயலாபம் கருதி பொது நோக்கை வெறுத்து அலையும் கூட்டம் அல்ல… பொது நோக்கு கருதி சுயலாபங்களை வெறுக்கும் நாட்டம் கொண்டவர்கள் நாம்… நாம் வெல்லும் பக்கம் நிற்பவர்கள் அல்ல… நிற்கும் பக்கத்தின் வெற்றிக்காக நாம் உழைப்பவர்கள்… அவரை இவரை நம்புவது என்பதற்கு அப்பால் கனிந்து வந்திருக்கும் சூழலை சரிவரபயன்படுத்தி எமது இலக்கை நாமே எட்டிவிட எம்மை நாமமே நாம் முழுமையாக நம்புகிறோம்.
நாடாளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெல்வாரா இல்லையா என்பதற்கு அப்பால்… எமது தேசத்தின் இன்றைய பொருளாதார சவால்களை அவரே வெல்வார் என்றே அவரை நாம் அரசியல் துணிச்சலோடு ஆதரித்தோம். நாம் விரும்பியது போல் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஜனாதிபதியாக சிம்மாசனம் எறியிருக்கின்றார்…தனது சிம்மாசன உரையில் அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்வகட்சி அரசுக்கான அழைப்பை விடுத்துள்ளார்… இது ஒரு அரிய வாய்ப்பு… சகல தரப்புடனும் இணைந்து சக தமிழ் தரப்பும் இதை சரிவரப்பயன்படுத்த முன்வரவேண்டும்,..
இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடக்கம், அதை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் உட்பட… வரலாறெங்கும் இதுவரை காலம் எமக்கு கிடைத்த அறிய வாய்ப்புகள் யாவும் பன்றிகளுக்கு முன்னாள் போடப்பட்ட முத்தாகவே கடந்து போய் விட்டன… இன்று கனிந்துள்ள அரிய வாய்ப்பையாவது சுயலாபம் அற்று அறிவார்ந்து சிந்தித்து சரிவர பயன்படுத்த முன்வருமாறு சக தமிழ் தரப்பினருக்கு மீண்டும் நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்…
ஒரு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐம்பது அம்ச திட்டத்தை முன்மொழிந்திக்கிறார்… அதில் தமிழ் பேசும் மக்கள் சார்பாக நாம் முன்வைத்திருக்கும் பத்து அம்ச கோரிக்கைகளும் உள்ளடங்கியிருக்கின்றன. இவைகளை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்து செயலாற்ற முன்வருமாறு நான் சகல கட்சிகளையும் அழைக்கின்றேன்,..
இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டில் நிலவுகின்ற சவால்களுக்கு முகங்கொடுத்து, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இருப்போரில் சிறந்த தேர்வு கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே என நாம் நம்புகின்றோம். எமது தீர்க்கதரிசனமான முடிவு இறுதியில் வென்றது. அது எமது நடைமுறைச் சாத்தியமான வழிமுறைக்கு கிடைத்த மேலுமொரு வெற்றியாகும். அதேபோன்று எமது தேசிய நல்லிணக்கம் நோக்கிய பயணத்திற்கு மேலும் வலு சேர்ப்பதற்கு இத் தெரிவு சாதகமானதாகும்.
ஜனாதிபதி தெரிவில் தமது ஆதரவினை நாளை சொல்கிறோம், நாளை மறுநாள் சொல்கிறோம், வாக்கெடுப்புக்கு முன் சொல்கிறோம், பின்னர் சொல்கிறோம் என நாங்கள் சாக்குப் போக்கு கூறவில்லை.
சகல தமிழ் அரசியல் தரப்பினர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டுவிட்டு, இப்போது கறுப்பாடுகளைத் தேடுவதாக பாசாங்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஜனாதிபதி அவர்களது வெற்றியில் தமிழ் அரசியல் தரப்புகளின் பங்களிப்பும் காத்திரமாக இருந்திருந்தால், அது எமது மக்களின் நலன்களுக்கு மேலும் வாய்ப்பாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
வழமையாக செய்கின்ற எமது மக்களுக்கான துரோகத்தனத்தையே இம்முறையும் சக தமிழ் அரசியல் தரப்புகள் செய்துவிட்டு, இன்று கறுப்பாடு அரசியலை முன்னெடுத்து வருகின்றன. புலித் தோல் போர்த்திய ஆடுகளாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்ற கறுப்பாடுகளும், கறுப்பாடுகளான கறுப்பாடுகளும், கறுப்பாடுகளைத் தேடுவதாகக் கூறுகின்றன. இந்த கறுப்பாட்டு அரசியல் அநேகமாக அடுத்த ஏதாவது ஒரு தேர்தல் வரை மேய்ந்து கொண்டேயிருக்கும் என எமது மக்கள் முணுமுணுக்கின்றதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.
இன்று, எமது நாடு முகங்கொடுத்திருக்கும் தலையாய பிரச்சினைகளை படிப்படியாகத் தீர்ப்பதற்கான நம்பிக்கை தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துப் பிரச்சினைகளும் முழுமையாகத் தீர இன்னும் சில காலம் எடுக்கும். இந்தப் பிச்சினைகளிருந்து மக்கள் பிரதிநிதிகளான நாம் ஒளிந்திருக்கவோ, அல்லது, தட்டிக் கழித்துச் செல்லவோ முடியாது.
அந்த வகையில் நான், என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடற்றொழில் அமைச்சு சார்ந்து நாடாளாவிய ரீதியில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்களை நேரில் சந்திப்பதற்கென அந்தந்த பகுதிகளுக்கும் சென்று வருகின்றேன். இந்த நாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கடற்றொழிலார்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 60 ஆயிரம் வரையிலான நன்னீர் வேளாண்மை செய்கையாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அடிப்படை வசதிகள் ரீதியில், பொருளாதார ரீதியில், பொருத்தமான சந்தை வாய்ப்பு ரீதியில், சமூக ரீதியில், கல்வி, சுகாதார ரீதியில் என பல வழிகளிலும் இவர்களுக்கு உதவ வேண்டும். அதேநேரம், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான போசாக்கினையும் உறுதிபடுத்த வேண்டும்.
அந்த வகையில், கடந்த வாரங்களில் தென் மாகாணம், மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்திலும் பல கடற்றொழில் பகுதிகளுக்குச் சென்று, கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்து வருகின்றேன்.
தற்போதைய நிலையில், எரிபொருள் பிரச்சினை காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு, மூன்று மாதங்களாக தொழிலின்மையால் அவர்கள் வாழ்க்கையில் விரக்கதியடைந்திருப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. அந்த விரக்தி சில நேரங்களில் ஆக்ரோசமாகவும் வெளிப்படுகின்றன. அது இயல்பு.
எனவே, எமது கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நான் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேன். இன்னும் சில தினங்களில் அப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த சபையில் முன்வைக்கின்றேன்.
இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற நிலையில், எமது ஜனாதிபதி அவர்கள் தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய உற்பத்தியை அதிகரித்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதுடன், அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பாதுகாப்பினை உறுதிபடுத்திக் கொள்வதற்கும், நாட்டு மக்களின் போசாக்கு நிலையை உறுதிப்படுத்துவதற்கும், உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான நியாயமான விலையை பேணுவதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்புகின்றேன்.
இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் மேம்பாட்டினை பிரதிபலிப்பதாகவே ஜனாதிபதி அவர்களின் கொள்கைப் பிரகடன உரை அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழ் மக்கள் பல காலமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதானது அதில் ஒரு முக்கிய விடயம். எமது மக்களின் அன்றாட, அத்தியாவசிய பிரச்சினைகளை நாம் எம்மால் முடிந்தளவு தீர்த்து வருகின்ற அதே நேரம் சமகாலத்திலேயே அரசியல் தீர்வு குறித்தும் முயற்சித்து வருகின்றோம்.
அந்த வகையில் எம்மால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டிருந்த எமது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து முன்நோக்கிச் செல்வதற்கும், மேலும் காலத்தை வீணடிக்காமல் சக தமிழ் தரப்பினரும் முன்வர வேண்டுமேன மீண்டும் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன.
மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களது உரையில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பல்லாண்டு காலமாக அம்மக்கள் முகங்கொடுத்து வருகின்ற சமூக, பொருளதார மற்றும் அடிப்படை வசதிகள் சார்ந்து அம்மக்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இன, மத, கட்சி போன்ற அனைத்து பேதங்களையும் கடந்து, திறமை மற்றும் தகுதி அடிப்படையில் மக்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்ற அடிப்படையினை உறுதிப்படுத்துவதானது மிக முக்கியமான விடயமாகும். இது, இந்த நாட்டின் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான முன்னேற்பாடாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், எமது புலம்பெயர் உறவுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்வது, தடைசெய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடைகளை அகற்றுவது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போன உறவுகளுக்கான பரிகாரம், எமது மக்களின் காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வது உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடியும் வருகின்றேன்.
அதே நேரம், ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாக விடுத்திருக்கின்ற சர்வ கட்சி அரசாங்கம் குறித்த அழைப்பினை அனைத்து தரப்பினரும் ஏற்க முன்வருவது காலத்தின் அவசியமாகும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எமது மக்கள் மீண்டும் சுதந்திரமானதும், அனைத்து உரிமைகளையும் பெற்ற, நியாயமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக வாழ்வதற்கான எதிர்கால அடிப்படையினை நாம் உருவாக்க வேண்டும்.
கடந்த கால தவறுகள் அனைத்தும் திருத்தப்படல் வேண்டும். அந்த வகையில், ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன் கருதி எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் நாம் பக்க பலமாக இருப்போம் என்பதைத் கூறிக்கொண்டு, இந்த சபையில் எமது அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரமுறைமைக்கிடையிலான சமபலத்தை பேணக்கூடிய வகையில் 22 ஆவது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்டிருகிறது. அதேபோல இந்த வருடத்திற்கான மீளாய்வு வரவு செலவு திட்டமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சின், கடல் தொழில் அமைச்சின் முன்னுரிமையாக உணவு பாதுகாப்பையும், கடல் தொழில் சார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து உயர்த்துவதையும், அதேவேளை இந்த கடல் தொழில் கைத்தொழிலினை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பிற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளேன்.
கடைசியாக, கஜேந்திரனது நாடாளுமன்ற உரையில் தனது தம்பி யுத்தகாலத்தில் அரச படைகலால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அதில் எனது பெயரைக் குறிப்பிட்டு எனக்கு சம்மந்தம் இருப்பதாகவும் வெளிப்படுத்தியிருந்தார். அது உண்மை தான். அவரது தம்பி மாத்திரம் அல்ல பல நூற்றுக்கணக்கானவர்களை நான் விடுவித்திருக்கின்றேன். அந்த வகையில் அதை வெளிப்படுத்திய அவரிற்கு நன்றியைக் கூறிக் கொண்டு, ஆனால் துரதிஸ்டவசமாக அவரது குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்டோரில் எனது தம்பி உட்பட எனது பாசத்திற்குரிய பல உறவுகளை இன்றுவரையிலும் நான் தேடிக்கொண்டே இருக்கின்றேன் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Be First to Comment