ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டதுடன் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் பங்கேற்பார் என்றும் அவருக்கு அரசியல் வாழ்க்கையை தவிர வேறு வாழ்க்கை இல்லை என்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் மைத்துனர் நிரஞ்சன் அசரப்ப தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைதண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்கான இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான கடிதத்தில் கையொப்பத்தை பெற்றுச் செல்வதற்காகவே இன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்தோம்.
அவர் விடுதலையாகி வருவதற்கு ஆகக் குறைந்தது இரண்டு வாரங்கள் செல்லலாம்.
கூடிய விரைவில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அவர் விடுதலையாகி வந்தவுடன் அரசியலில் பங்கேற்பார். கட்சி மாறுவாரா இல்லையா என்பது தொடர்பில் அவர் எதனையும் கூறவில்லை.
ஜனாதிபதி அவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைக்கவும் இல்லை.
ரஞ்சன் ராமநாயக்க சுமார் ஒன்றறை வருடங்கள் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.
எனவே ஜனாதிபதியே ரஞ்சனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளார்.
எனவே அவர் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் பங்கேற்பார். செயற்பாட்டு அரசியல் வாழ்க்கையை தவிர அவருக்கு வேறு வாழ்க்கை இல்லை.
ஊழல்மோசடிகளில் ஈடுபட்டதாலோ, திருட்டில் ஈடுபட்டதாலோ அவர் சிறைக்கு செல்லவில்லை.
எனவே அவர் மரணிக்கும் வரை அரசியலில் ஈடுபடுவார்.
Be First to Comment