Press "Enter" to skip to content

கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்பு

புத்தளம் – மஹகும்புக்கடவல கவயன்குளம் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரத் தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்து மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாமரத் தோட்டத்தில் பணிபுரிந்த மஹவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் தலைப்பகுதியில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தோட்டத்தின் கண்டெய்னர் பெட்டிக்குள் சடலமொன்று கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மேற்படி மாமரத் தோட்டத்தில் வேலை செய்யும் மூவர் நேற்றிரவு குறித்த கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்துகொண்டு மது அருந்தியதாகவும், அதன் பின்னர் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அம்மூவரில் ஒருவர் இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபருடன் இணைந்து நேற்றிரவு மது அருந்தியதாக தெரிவிக்கப்படும் ஏனைய இருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மஹகும்புக்கடவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குமார தலைமையில் குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *