அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும் செயற்பாடுகளை நாளை ஆரம்பமாகவுள்ளதுடன் வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய நாளைமுதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை வழமையான அடிப்படையில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை காணப்படும் பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சகல மாகாண அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பமாகும் பாடசாலை வாரத்தில் போக்குவரத்து பிரச்சினையை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உரிய வகையில் அதிபர்களினால் சலுகை வழங்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சலுகை வழங்கப்பட வேண்டிய முறைமை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் பாடங்களை உரிய முறையில் கற்பிப்பதற்காக பாடசாலை நேரம் பயன்படுத்தப்பட வேண்டும்.
பாடசாலை நேரத்திற்கு மேலதிக பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ளவும், பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுப்படுத்துவதற்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Be First to Comment