Press "Enter" to skip to content

என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை

உலகளவில் வைரலான “என்ஜாய் எஞ்சாமி”பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், அதனை பாடிய தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் பாடலை எழுதி பாடிய  தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின்  தொடக்கவிழாவில்  தெருக்குறள் அறிவு இல்லாமல் மேடையில் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. உண்மையில் இந்த பாடலின்  மூலப்பாடலை பாடியது தீ மற்றும் தெருக்குரல் அறிவு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அறிவு பங்குபெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சைக்குள்ளாகியது.

அறிவு அமெரிக்கா சென்றதால் தான் நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை என்று சில செய்திகள் வெளியானது, இந்நிலையில், இது குறித்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்.

இப்பாடல் வள்ளியம்மாள் போன்ற நிலம் இல்லாத தேயிலைத் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. என்னுடைய எல்லாப் பாடல்களும் ஒடுக்கப்பட்டத் தலைமுறைகளின் வலியைப் பற்றியது. இது போல் இன்னும் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் இந்த மண்ணில் இருந்துள்ளது. இவை அனைத்தும் நம் முன்னோர்களின் வாழ்வியல், அவர்களின் நிலம் பற்றியது. இப்பாடலை இன்று அனைவரும் ஒரு அழகானப் பாடலாகப் பார்க்கிறார்கள்.

பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக உருவாக்கியுள்ளோம்.. நம் மரபுகளைப் பாடல் வழியாகக் கடத்தியுள்ளோம். நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம் கடைசியில் உண்மைதான் எப்போதும் வெல்லும் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் அறிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை  சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோன், இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் மற்றும் ‘நீயே ஒளி’ பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னர் சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோன், இந்திய பதிப்பின், அட்டைப் படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் மற்றும் ‘நீயே ஒளி’ பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகருமான, தெருக்குரல் அறிவு புகைப்படம் இடம்பெற வில்லை.

அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக கூறி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

இதை தொடர்ந்து பலர் தெருக்குரல் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரோலிங் ஸ்டோன் ஆகஸ்ட் மாத இணை இதழில்… தெருக்குரல் அறிவின் புகைப்படத்தையும், அவரது சாதனைகள் குறித்தும் குறிப்பிட்டு  கட்டுரை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரோலிங் ஸ்டோன் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதனை தன்னுடைய சமூக வலைத்தளத்திலும் ரோலிங் ஸ்டோன் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து பலரும் இதற்க்கு தங்களுடைய ஆதரவையும், தெருக்குரல் அறிவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையிலேயே , மீண்டும் செஸ் ஒலிம்பியாட்ட விழாவில் அறிவு புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இது தொடர்பில்  பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

, “எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன். இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி’ திரைப்படமும் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது.

பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம். இதையும் படியுங்கள்: விஜய், தனுஷ் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. ‘எஞ்சாயி எஞ்சாமி’ எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தெரிவித்துள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வேர்களையும், இயற்கையையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி’ பாடலை கம்போஸ், புரோகிராமிங் மற்றும் ரெக்கார்டிங் செய்து கோ சிங்கராக பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்’ என்று குறிப்பிடப்படுகிறது. இதை independent space-ல் பலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.

நான், தீ, அறிவு மூவரும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் அன்பிற்காகவும், இண்டிபெண்டெண்ட் இசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.

தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினார்கள். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல்கள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன். இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல நிஜ வாழ்க்கைக் கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான ‘கடைசி விவசாயி’ தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.

பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. ’பந்தலுல பாவக்கா’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.

ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். அவற்றில் ‘என்ஜாயி என்ஜாமி’யும் ஒன்று. என்னுடைய இந்த பொருத்தமற்ற சொற்றொடரை மையப்படுத்தி அறிவு ஒரு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பாடலின் முழு உருவாக்கமும் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், பன்னாகவும் இருந்தது.

இந்தப் பாடலின் மொத்த வருமானமும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நான் மூவரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். கலைஞர்கள் தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் எந்தவொரு பாரபட்சமின்றியும் அவர்களுக்கு கிரெடிட் கொடுத்துள்ளேன். என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சு அதற்கு சாட்சி.

செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி எஞ்சாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் இருந்ததால் அறிவால் அதில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. என தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ சாதி மதம் குலம் என்ற அனைத்துக்கும்அப்பாற்பட்டதே கலையும் கலைஞர்களும்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *